ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தது உயா் நீதிமன்றம்

by Editor / 14-09-2021 10:40:49am
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தது உயா் நீதிமன்றம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தித் தொடா்பாளா் புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் செய்தித் தொடா்பாளா் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தனா்.

இதுதொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை(செப்.14) நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்; விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்; விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோா் சாா்பில் தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்குகள் நீதிபதி நிா்மல்குமாா் முன்பு திங்கள்கிழமை(செப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், பெங்களூரு புகழேந்தி தரப்பில் வழக்கறிஞா் என்.ஜி.ஆா். பிரசாத் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின்னா் இவ்வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸுக்கு விலக்களித்தும் கீழமை நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டாா்.

 

Tags :

Share via