கோயில்களில் காதுகுத்துக்கு அதிக பணம் வசூல் குறித்து விசாரிக்க குழு

by Editor / 14-09-2021 10:39:44am
கோயில்களில் காதுகுத்துக்கு அதிக பணம் வசூல் குறித்து விசாரிக்க குழு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று விமான நிலையம் வந்திருந்தார். அவருடன் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும், தமிழக மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் உடன் வந்திருந்தனர்.

அமைச்சர்களுக்கு விமான நிலையத்தில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் கோவில் சொத்துக்களை யார் அபகரித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

திருக்கோயில் வளர்ச்சியை சீரழிவுப்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு துறை சார்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கோயில்களில் பக்தர்கள் இலகுவாக சாமி தரிசனம் செய்வதற்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. இதன்மூலம் கோயில்களில் வருமானம் குறையும், பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றதொரு புகாரும் எழுந்ததன் அடிப்படையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கோயில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு துறைரீதியான குழுவின் மூலம் ஆய்வு நடத்தப்படும். அதன்படி யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பக்தர்கள் தங்களது காணிக்கை நிறைவாக இறைவனுக்கு செலுத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை வழி காணும் என்றார்.

 

Tags :

Share via