உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, 14900 வாக்குச்சாவடிகளுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தல் நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது அவசியம். மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags :