பக்தர்கள் வருகை அதிகரிப்பு: திருப்பதியில் மீண்டும் ரூ.3 கோடியை தொட்ட உண்டியல் வருவாய்
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. உண்டியல் மற்றும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்களும் அதிகரித்து வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை மட்டுமே தினமும் வருவாய் கிடைத்து வந்தது. மேலும் பக்தர்கள் தங்கும் அறை வாடகைகள், லட்டு விற்பனை உள்ளிட்ட இதர வருவாய்கள் வெகுவாகக் குறைந்தன.
கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ரூ.300 கட்டணத்தில் 8000 தரிசன டிக்கெட்டுகளும், 8000 இலவச தரிசன டிக்கெட்களும் வெளியிடப்பட்டு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. உண்டியல் மற்றும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்களும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 25-ந்தேதி 29,712 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் மூலம் ரூ.2.53 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்தது. இதேபோல் கடந்த 26-ந்தேதி ரூ.2.66 கோடியும், நேற்று முன்தினம் ரூ.2.90 கோடியும் கிடைத்தது. நேற்று 27,167 பேர் தரிசனம் செய்தனர். 13 ஆயிரத்து 247 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.2.95 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்தது. ஒரு ஆண்டிற்கு பிறகு உண்டியல் வருமானம் மீண்டும் ரூ.3 கோடி அளவிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 5-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 4-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் பெறப்பட மாட்டாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :