பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 900 பேர் மீது வழக்கு

by Editor / 08-10-2021 10:33:31am
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 900 பேர் மீது வழக்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் கோயில்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது. திமுக போலி மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறது. தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் வழிபாட்டிற்கு தடை செய்வது தமிழக அரசின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல" என்றார்.

இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி நாகர்கோவிலில் நேற்று இவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

 

Tags :

Share via