வங்கக்கடலில் 10–ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (10 ந்தேதி) உருவாகிறது. இதனால் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
10 ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.
11 ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:
பள்ளிப்பட்டு 15 செ.மீ., பென்னாகரம் 8 செ.மீ., சோளிங்கர் 5 செ.மீ., கிருஷ்ணகிரி, நடுவட்டம் தலா 4 செ.மீ., போளூர், எருமைப்பட்டி, கொப்பம்பட்டி தலா 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வரும் 10 ந் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
8 ந்தேதி முதல் 10 ந்தேதி வரை அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் 11 ந்தேதி, 12 ந்தேதிகளில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :