முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை முகாம் நடத்தப்படும். 23 ந்தேதி 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அரசு பல் மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக ‘நடமாடும் பல் மருத்துவமனை’ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் பல் மருத்துவ சேவை வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளிகளுக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.
அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என்ற வதந்தியை பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். இது தவறு. இருந்தாலும் அவர்களுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 6வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். கடந்த 5வது மெகா தடுப்பூசி முகாமின்போது 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tags :