வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

by Admin / 02-03-2022 03:56:21pm
 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

துபாய் நாட்டின் ஜபல்அலி துறைமுகத்தில் இருந்து பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு பேரீட்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டது. கப்பல் மூலம் பேரீட்சம் பழங்கள் கடந்த 28-ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்த கன்டெய்னர் சிப்காட் பகுதியில் உள்ள முனையத்தில் வைக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக பெங்களூருவை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அதற்கான ஆவணங்களை பரிசோதித்த தூத்துக்குடி மற்றும் பெங்களூருவை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கன்டெய்னரை சோதனை செய்தனர்.

அப்போது அதில் 2 அடுக்குகள் பேரீட்சம் பழங்கள் வைக்கப் பட்டிருந்தது. அதற்கு பின்னால் சுமார் 400 பெட்டிகளில் சிகரெட் பெட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டு சிகரெட் பண்டல்களில் இருந்த சுமார் 3 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

சிகரெட் இறக்குமதிக்கு தடையில்லை என்றாலும் அதற்கு விதிக்கப்படும் வரி சுமார் 160 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. அதே போன்று சிகரெட் லேபிளில் விதிமுறைகளின்படி பல்வேறு விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் சிகரெட் களை விற்பனை செய்ய அதில் எச்சரிக்கை அறிவிப்பு படம் பதிவு செய்யப் பட்டிருத்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அவ்வாறு எச்சரிக்கை படம் பதிவு செய் யப்படாத சிகரெட்டுகளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இருந்து சிகரெட்டுகள் கடத்தி வரப்படுவது அடிக்கடி நடக்கிறது.

இதைத் தொடர்ந்து சிகரெட்டை கடத்தி வந்தவர்கள் யார்? அது எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் பேரீட்சம் பழத்தை துபாயில் இருந்து இறக்குமதி செய்தவர் யார் என அவரின் முகவரியை கண்டறிந்து பெங்களூரு மற்றும் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.தொடர்ந்து சுங்க முகவரி டமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via