கலப்பட மது குடித்த 14 பேர் உயிரிழப்பு பலருக்கு உடல் நிலை பாதிப்பு
பீகாரின் பங்கா, பாகல்பூர் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது போலி மதுபானம் அருந்தியவர்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் நகரில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாஹிப் கஞ்ச் பகுதியில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மாதேபுராவில், கலப்பட மது குடித்ததாகக் கூறப்படும் மூன்று பேர் உயிரிழந்தனர். சஹர்சா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலி மதுபானமே இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அதை உறுதிப்படுத்தவில்லை.
பீகாரில் மதுபான மாஃபியாக்களை ஒடுக்கவும், சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆலைகளை அழிக்கவும் அம்மாநில அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags :