.7½ கோடி சொத்துகள் பறிமுதல் அமலாக்கத்துறை நடவடிக்கை

by Staff / 30-03-2022 04:36:05pm
.7½ கோடி சொத்துகள் பறிமுதல் அமலாக்கத்துறை நடவடிக்கை

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.செல்வராஜ் என்பவர் மீது செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திரா சித்தூர் மாவட்ட போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சென்னை சுங்கத்துறையும், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்ககம் கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளன.
 
சுங்கத்துறையும், அமலாக்க இயக்ககமும் அவர் மீது தனித்தனியே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளன. அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செல்வராஜின் வீடுகள், நிலங்கள் உள்பட பல்வேறு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதில், செம்மரக்கட்டை, சந்தனமரக்கட்டை மற்றும் பிற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் ஈட்டிய தொழில்முறை குற்றவாளி செல்வராஜ். அவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு சொத்துகளை வாங்கியுள்ளார்.

செல்வராஜுக்கு சொந்தமான, ஆத்தூர் மற்றும் சென்னை செங்குன்றம் புது எ ருமைவெட்டிபாளையத்தில் உள்ள 8 வீட்டுமனைகள், காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள 6 விவசாய நிலங்கள், சென்னை வீனஸ் காலனி, புதுச்சேரி சாரம் கிராமத்தில் உள்ள 2 வீடுகள் மற்றும் சஞ்சனா மெட்டல்வேர் இந்தியா என்ற நிறுவனத்தின் பெயரிலான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு மொத்தம் ரூ.7.54 கோடி ஆகும் என்று அமலாக்க இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.7½ கோடி சொத்துகள் பறிமுதல் அமலாக்கத்துறை நடவடிக்கை
 

Tags :

Share via