பத்திரிகையாளர்  சலுகை யாருக்கு லாபம் ?

by Editor / 24-07-2021 08:29:44pm
பத்திரிகையாளர்  சலுகை யாருக்கு லாபம் ?


முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துள்ள சலுகைகளுக்கு ஏகோபித்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிகின்றன. பத்திரிகையாளர்களின் ஊக்கத் தொகை 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.நாமும் வரவேற்கிறோம்.  ஆனால்  இதை அப்படியே அனைவரும் பெற்றுவிடமுடியுமா ? என்பது விடை தெரியாத கேள்வி .


பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு  உள்ள சலுகைகள் என்ன தெரியுமா ?
-பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வுபெற்று, நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தின்படி ஓய்வூதியம் பெற்று இயற்கை எய்திய பத்திரிகையாளரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் அளிக்கப்படும். 


பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உண்டு. தவிர பத்திரிகையாளர் நல நிதியம் என்பது கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித் தொகையிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000/- வரை மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது.

மேலும் பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கப்பட்டு வருகிறது.


காலமுறை இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அட்டைகள் (Press Pass) வழங்கப்பட்டு வருகின்றன.செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இதை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்  பணியாற்றுவோர்தான்.

எத்தனை  பிரபல நிறுவனங்கள்  அனுமதிக்கின்றன. குறைந்தது பென்ஷன், வீட்டுமனை, வீடு, பஸ்பாஸ் உண்டா?  ஒவ்வொரு செய்தி நிறுவனத்திலும் பணியாற்றும் பத்திரிகையாளர்களில் வெறும் 10 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரஅட்டை வழங்கப்படுகிறது. அப்படியெனில் அந்த 10 பேர் மட்டும் தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களா? மற்றவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? செய்தி  ஆசிரியர், உதவி ஆசிரியர், தலைமை செய்தியாளர் என முதலாளிகளுக்கு  வேண்டடிய அல்லது உறவினர்கள் 5 அங்கீகார அட்டைகளை வைத்துக் கொள்வர்.மீதி  5 அட்டைகள் வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். அப்படியெனில் இவர்களுடன் இரவு,

பகலாக பணியாற்றும் சக பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?மேலும் செய்திப்பிரிவில் பணிபுரியும் இதர ஊழியர்கள் என்ன பாவம் செய்தார்கள் . ஒரு இலவச சினிமா டிக்கெட் கூட கிடைக்காது. டிஜிட்டல் ஊடகங்களில்  பணிபுரிவோர் காடு ,மழை, இரவு,பகல் , நோய் ,நொடி எதுவாக இருந்தாலும் பறந்து சென்று செய்தி சேகரிக்கின்றனர். இவர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட  படும்பாடு  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தமிழகத்தில் 200 சங்கங்கள் உண்டு. சந்தா  மட்டுமே இவர்களின் இலக்கு. எத்தனை லட்சம் பத்திரிகையாளர்கள்  எந்த சலுகையும் கிடைக்காமல் பெருமையாக சொல்லி திரிகிறார்கள். அஞ்சுக்கும் ,பத்துக்கும் இவர்கள் படும் துயரத்தை துடைத்து அனைவருக்கும் பலன் கிடைக்க பாருங்கள்..


by -S .Ravindran 
 

 

Tags :

Share via