கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை

by Editor / 15-07-2022 03:38:19pm
கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை

கூடல் நகர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்காக பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்டிருந்தது. இதை ரயில் விபத்தாக கருதி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலி எழுப்பப்பட்டது. உடனடியாக தளவாட சாமான்கள், அவசர சிகிச்சை மருந்து பொருட்கள் கொண்ட கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் மதுரையிலிருந்து கூடல் நகருக்கு இயக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக கூடல் நகருக்கு விரைந்தனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேரும் துணை ஆணையர் எஸ். வைத்தியலிங்கம் தலைமையில் மீட்பு பணிக்காக கூடல் நகர் வந்திருந்தனர். ரயில் பெட்டி கவிழ்ந்திருந்த பகுதி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களால் ஒளிரும் ரிப்பன் வேலி மூலம் பாதுகாக்கப்பட்டது. ரயில் பெட்டியின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு சித்தரிக்கப்பட்ட காயம் அடைந்த பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அருகில் இருந்த ரயில்வே மருத்துவ குழு முதல் உதவி சிகிச்சை அளித்தது. பின்பு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் தகவல் மையம் பயண சீட்டு பணம் திரும்ப அளிக்கும் அலுவலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டு இருந்தது. டிஷ் ஆன்டனாவுடன் நவீன தொலைத்தொடர்பு கருவிகளும் நிறுவப்பட்டிருந்தன. கவிழ்ந்திருந்த ரயில் பெட்டி கிரேன் மூலம் தூக்கப்பட்டு ரயில் பாதையில் வைக்கப்பட்டது. ரயில்வே முதுநிலை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை தொலைத்தொடர்பு அதிகாரி ராம்பிரசாத், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் சதீஸ் சரவணன், முதல் நிலை ரயில் இயக்க அதிகாரி மது, உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார், உதவி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சுபாஷ் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

 

Tags : Train Accident Rescue Practice in Goodal Nagar

Share via