10 ரூபாய் நோட்டால் பிடிப்பட்ட தம்பதியனர்!

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை(38). இவர் கடந்த மாதம் 2ம் தேதி தனது தாய் இறந்துவிட்டதால் விழுப்புரத்திற்கு சென்று கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். ஊருக்கு போகும் போது சாவியை பக்கத்து வீட்டில் உள்ள நந்தினி என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். வீடு திரும்பிய பின் பீரோவில் பணம் எடுப்பதற்காக சென்ற துரை பீரோவில் இருந்த 84 ஆயிரம் பணம் 3 1/4 கால் சவரன் தங்க நகை உள்ளிட்டவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் நந்தினியிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். அவர், தான் வீட்டை திறக்கவில்லை என்றும் பணம் காணாமல் போனது பற்றி எனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். துரை அளித்த புகாரில், தான் எப்போதும் பணத்தை எண்ணி விட்டு பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை முதல் தாளில் எழுதி வைக்கும் பழக்கம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பொழிச்சலூர் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படும் இடத்தில் துரை எழுதியது போன்ற பத்து ரூபாய் நோட்டு கைமாறி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், உமா சங்கர் அந்தப் பணத்தை கொடுத்ததாக மது விற்பனை செய்தவர் கூறியுள்ளார். இதனால், நந்தினி மற்றும் அவரது கணவர் உமா ஷங்கர் ஆகிய இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Tags :