ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை
ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை
சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.
தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா அவர்கள் இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்ப்படுத்தி இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என்பதை பூமிப்பந்தில் வாழும் பத்துக் கோடித் தமிழர்களும் நன்கு அறிவார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981 ஆம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டவர் தலைவர் வைகோ.
பாலஸ்தீனப் போராளிகளை அங்கீகரித்த இந்தியா, ஈழ விடுதலைப்புலிகளை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியவர்;
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு என்று நாற்பது ஆண்டுகளாக கூறி வருபவர்;
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் என இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் சொல்ல வைத்த தலைவர்;
இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தார்.
இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களை வேட்டையாடிய போது நாடாளுமன்றத்தில் எரிமலையாக வெடித்தவர் தலைவர் வைகோ.
போரில் காயம் பட்டு கை,கால்களை இழந்து தாயின்மடி என்று வந்த விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் தந்து, மருத்துவ சிகிச்சை அளித்ததால் தலைவரின் தம்பி வை.இரவிச்சந்திரன் தடா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.
இவையெல்லாம் திருமா அவர்கள் அறிந்ததுதான்;
தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயச் சுவர்களில் தமிழீழ விடுதலைப்போராட்டமும், புலிகள் தலைவர் பிரபாகரனும் கல்வெட்டாய் பதிந்து இருப்பதற்கு தலைவர் வைகோ தான் காரணம் என்பதை பல மேடைகளில் திருமாவளவன் அவர்களே சுட்டிக் காட்டி இருக்கிறார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் தலைவர் வைகோ என்பதை மறுக்க முடியாது.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் வெங்கொடுமை சிறையில் வாடியவர் வைகோ.
பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா அவர்கள் குறிப்பிடுவது வேதனை தருகிறது.
ஈழத்தமிழர்களை பூண்டோடு கருவறுக்க கொலைப்பாதகன் ராஜபக்சே மூர்க்கத்தனமான போரை கட்டவிழ்த்து விட்டு அப்பாவித் தமிழர்களை ரசாயன குண்டுகளைப் போட்டு கொன்று குவித்தபோது, இந்திய அரசு போரை தடுக்காதது மட்டுமல்ல, சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகளை அளித்தது.
ஆயுதங்கள், ராடார் வழங்கி சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியும் கொடுத்தது.
உலக நாடுகள் பலவும் சிங்கள இனவாத அரசுக்கு உதவி செய்தன. ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போரில் பங்கேற்றன. இந்தியாவும் போரில் பங்கேற்று ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு துணை போனது. இந்திய அரசின் இந்தக் கொடும் பிழையை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது
தலைவர் வைகோ அவர்கள் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை எட்டு முறை சந்தித்து, சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம்; ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார்.
ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சிக்கவில்லை. போர் முடிந்ததும், எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றான் ராஜபக்சே.
அந்தக் காலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் தலைவர் வைகோ அவர்கள்.
இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு, தலைவர் வைகோ அவர்கள் மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்?.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலைவர் வைகோ மீது அளவு கடந்த பாசமும் நேசமும் கொண்டிருந்தவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை விமர்சனம் செய்தார் என்று திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலகட்டத்தில் தலைவர் வைகோ, பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள்தான் ஈழப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர்.
சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்ட போதும் அண்ணன் திருமா அதை கடந்து போனது வருத்தம் அளிக்கிறது.
2002 இல் சமாதானக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் அழைப்பை ஏற்று திருமா தலைவர் வைகோ இலங்கையில் நுழைய உட்பட சிலர் ஈழம் சென்ற போது, தலைவர் வைகோ வேலூர் சிறையில் இருந்தார் என்பதும், சிங்கள அரசு, தடை போட்டிருந்தது. அந்தத் இன்றும் நீடிக்கிறது என்பதும் நேர்காணல் செய்த நெறியாளருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.
அப்போது, எம்.ஜி.ஆர் பற்றி உயர்வாக கூறினார் பிரபாகரன் என்று கூறிய திருமா, மற்ற தமிழ்நாட்டு தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறினாராம். யார் யார் என்று நெறியாளர் கேட்க தனியாக சொல்கிறேன் என்று திருமா கூறுகிறார்.
தலைவர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியதைப் போன்று நிறுவுகிறார் திருமா. இது நியாயம்தானா?
இந்திராகாந்தி சொல்லிதான் எம்.ஜி.ஆர் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி வழங்கியதாக திருமா கூறுகிறார். இந்திராகாந்தி இறந்தது 1984 இல். எம்.ஜி.ஆர். நிதி கொடுத்தது 1986 இல். இதுவும் முரணான தகவல்.
போரை நிறுத்தக் கோரி தாம் செங்கற்பட்டில் உண்ணாவிரதம் இருந்த போது, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்து பார்த்தனர், என்னை யாரும் ஊக்கப்படுத்தவில்லை என்று திருமா கூறியதும், நெறியாளர் முக்தார் வைகோ வெளிநாட்டில் இருந்தாரா? என்று நக்கலாகக் கேட்கிறார். அதையும் இவர் ஆமோதிக்கிறார்.
ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த போது, அந்த குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கியது தலைவர் வைகோ மட்டுமே என்பது உண்மை.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க நீதிமன்றத்தில் தொடந்து வாதாடி வருவது தலைவர் வைகோ அவர்கள்தான் என்பதை மறைக்க முடியாது.
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்றைய உலகச் சூழலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு ஒன்றேத் தீர்வு என பெல்ஜியம் மாநாட்டில் முதன் முதலில் முன்வைத்த தலைவர் வைகோ அவர்கள் இன்றும் அந்த இலட்சியத்துடன் செயலாற்றி வருகிறார்.
பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவிலிருந்து உரிய அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்பி வைத்தார் சிவாஜிலிங்கம். இதிலும் வைகோ அவர்கள் மீது வீண் பழி போடுவது எதற்காக?
1989 ஆம் ஆண்டு தலைவர் வைகோ தனது உயிரை துச்சமாகக் கருதி, யுத்தக் காலத்தில் வவுனியா காட்டிற்கு சென்று மாவீரர் திலகம் மேதகு பிரபாகரன் அவர்களை சந்தித்தார். குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் 21 நாட்கள் தங்கி இருந்து விட்டு தலைவர் வைகோ ,கடலில் புலிகள் பாதுகாப்புடன் தமிழ்நாடு திரும்பிய போது மேதகு பிரபாகரன் தனது கைப்பட முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பி இருந்தார்.
அதில், “வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும், எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது” என்று மேதகு பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.
இதை விட வேறு எவரிடமிருந்தும் தலைவர் வைகோ அவர்களின் தமிழ் இனப் பற்றுக்கு சான்றிதழ் தேவை இல்லை.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டு விடும்.
இந்துத்துவ சனாதன சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய முகாமையான சிந்தனை,குறிக்கோளாக இருக்க வேண்டும்.
தி.மு.இராசேந்திரன்
துணைப் பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.03.2023
Tags :