ஹெராயின் விற்க முயன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை

by Staff / 14-04-2023 12:52:03pm
ஹெராயின் விற்க முயன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை

சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. திருமகள் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே. ஜெ. சரவணன் ஆஜராகி வாதிட்டார்.பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 500 கிராம் வைத்திருப்பது என்பது வர்த்தக ரீதியிலான பயன்பாடாகத்தான் கருத வேண்டும் எனவும், அதை ராஜு ராம் வைத்திருந்ததை காவல்துறை நிரூபித்துள்ளதால், 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories