மதுபோதையில் தகராறு - ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள எம்மாபூண்டி காலனி பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் கார்த்திக் என்கிற கருப்புசாமி(27) இவர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சந்திரன் (23)என்பவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது சந்திரன் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதால் கார்த்தியின் செல்போனை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கார்த்தி, சந்திரனிடம் தன்னுடைய செல்போனை எடுத்து சென்றது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் கார்த்தி எம்மாபூண்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள சாலையில் கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று அவரவர் வீட்டில் விட்டுள்ளனர். வீட்டிற்கு சென்று உறங்கிய கார்த்தி காலை வெகு நேரம் ஆகியும் தூக்கத்திலிருந்து மீளாததால் அவரது தாய் அவரை எழுப்பி உள்ளார். அப்போது கார்த்தியின் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் வரபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கார்த்தியின் பிரேதத்தை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மது போதையில் கார்த்தியை கீழே தள்ளிவிட்ட சந்திரன் என்பவரை கைது செய்து நம்பியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :