ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை:  2 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய  வடமாநில கொள்ளையர்

by Editor / 01-08-2021 07:07:56pm
ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை:  2 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய  வடமாநில கொள்ளையர்



கடந்த 2019 செப்டம்பர் 14-ம் தேதி அன்று, அகமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியில், பல லட்சம் மதிப்புள்ள 60 பண்டல்களில் புடவைகள் பார்சல் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ரயில் மறுநாள் (செப்டம்பர் 15) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதிலிருந்த பயணிகள் இறங்கியவுடன் சரக்கு பெட்டியில் உள்ள பார்சல்களை இறக்குவதற்காக, கதவை திறக்க நீண்ட நேரம் முயற்சி செய்தும் முடியாமல் போகவே, தாழிடப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து கதவை திறந்து பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளே இருந்த பார்சல் பண்டல்கள் கலைந்து போன நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், ரயில் சரக்கு பெட்டியின் மேல் பகுதியானது ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு வெட்டப்பட்டிருப்பதைக் போலீசார் கண்டுபிடித்தனர். சரக்கு ரயில் பெட்டியில் வெட்டப்பட்ட துளையின் வழியாக சென்று பார்த்தபோது, அந்த வழி, அருகில் உள்ள பயணிகள் பயணம் செய்யும் கழிவறையின் மேல் பகுதியில் முடிவடைந்தது. அதன் வழியாக கழிவறையை திறக்க செய்து வெளியே வந்தது தெரிய வந்தது.

கழிவறையின் மேல் பகுதியில் இருந்த பிளைவுட்டை அறுத்தெடுத்து, அதன் வழியாக உள்ளே நுழைந்து சென்று கொள்ளையர்கள் அருகிலுள்ள சரக்கு பெட்டி மேல்பகுதியை துளையிட்டு, 12 பண்டல்களில் இருந்த புடவைகளை கொள்ளை அடித்து சென்றதை ரயில்வே பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.

 இந்த நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எந்த தடயமும் கிடைக்கப் பெறாத இல்லாத நிலையில், சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான குழுவினர் விசாரணையை துவக்கினர். இதற்கு முன்னதாக இது போன்ற சம்பவம், ஏதேனும் ரயில் நிலையங்களில் நடந்துள்ளதா என்ற விவரங்களை சேகரித்து வந்தபோது, நாக்பூர் - வார்தா ரயில் நிலைய சந்திப்புக்கு இடையே, இதே போன்று கொள்ளை சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கொள்ளைபோன ரயில் பெட்டியை ஒட்டி பயணம் செய்த பயணிகளின் செல்போன் எண்கள், பழைய வழக்கில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்களின் டவர் லொக்கேஷனை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பழைய கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தது உறுதியானது.
இதையடுத்து புடவை பார்சல்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை பிடிக்க, கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுடன், கடந்த வாரம் நாக்பூர் சென்ற சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நாக்பூர் போலீசாரின் உதவியோடு, நாக்பூர் மொமின்புரா என்ற பகுதியை சேர்ந்த கொள்ளையன் முகம்மது ஜெசிம் என்பவரை கைது செய்தனர். இவர்தான் புடவைகளை கொள்ளையடித்தது தெரிந்தது.

இதையடுத்து முகம்மது ஜெசிம் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சென்னைக்கு அழைத்து கொண்டு வரப்பட்டார். கழிவறை மேல் பகுதியில் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே சென்று, அருகே உள்ள சரக்கு பெட்டியின் மேல் பகுதியை வெட்டி எடுத்து, பார்சல் பண்டல்களை கொள்ளை அடித்து சென்றதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகம்மது ஜெசிம்மை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

 

Tags :

Share via