முதியோர் உதவித்தொகை வழங்கலில் முறைகேடு - அன்புமணி ராமதாஸ்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் நடைபெற்றிருக்கும் முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70 பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ. 27 லட்சம், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுவதற்கு பதிலாக தனிநபர் ஒருவரின் கனக்கில் செலுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.ஓராண்டிற்கும் மேலாக இந்த முறைகேடு நடைபெற்று வந்த நிலையில், இப்போது தான் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஓராண்டாக இந்த முறைகேட்டை கண்டிபிடித்து தடுக்காமல் அரசு நிர்வாகம் உறங்கிக் கொண்டிருந்ததா? என்ற பொதுமக்களின் வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.இந்த மோசடிக்கு காரணமானவர்கள் யார்? அதற்கு துணை போனவர்கள் யார்? தமிழகத்தில் வேறு எந்த மாவட்டங்களில் எல்லாம் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
Tags :