கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளலை நேரில் பார்த்து சாமி தரிசனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
முன்னதாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், அருள்முருகன், புகழேந்தி , ஆதிகேசவலு ஆகியோர் கள்ளழகரை சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் சூரி மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் வந்தனர் முன்னதாக வீர ராகவ பெருமாள் மண்டகப்படி பகுதிக்கு வந்த நடிகர் சூரியுடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து மண்டகப்படியில் கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாலைகளை நடிகர் சூரி தொட்டு வணங்கினார்.
இதனை தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள வரும்போது கள்ளழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு மலர்களால் மற்றும் காசால் செய்யப்பட்ட மாலை மற்றும் வெட்டி வேர் மாலை ஆகியவை சாத்தப்பட்டது. அப்போது கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகர காவல் ஆணையர் லோகநாதன் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னா் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியபோது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா ..கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பகுதியில் இருந்த நீரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏராளமான பெண் காவலர்கள் தங்களது தலையில் தெளித்து தரிசனம் செய்தனர்.
Tags : கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளலை நேரில் பார்த்து சாமி தரிசனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்