நாளைமுதல் நாகை டூ இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.

by Editor / 12-05-2024 09:44:13am
நாளைமுதல் நாகை டூ இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.

 நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் கப்பல் இன்று நாகை செல்கிறது. இதை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. பல்வேறு காரணங்களால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயங்கிய கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்அடிப்படையில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கிய செரியாபாணி என்ற பெயர் கொண்ட கப்பல் இயற்கை சீற்றத்தை காரணம் காட்டி 20ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து ஒன்றிய அரசு தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது. இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் தயாராகி நேற்று முன்தினம் (10ம் தேதி) மதியம் சென்னை துறைமுகம் வந்தது.அதன்படி, பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் நாளை (மே 13) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து இந்த கப்பல் இன்று (மே 12) மதியம் நாகை வந்தடைய உள்ளது. சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.

 

Tags : நாளைமுதல் நாகை டூ இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.

Share via