தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.

by Editor / 02-06-2024 08:54:08am
தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி நான்கு மற்றும் ஆறு சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 380 ரூபாயும் சென்று திரும்ப 570 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்க மாதம் 340 ரூபாய் உத்தேசக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 2) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று காலை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆத்தூர், பரனூர், சூரப்பட்டு, வானகரம்,வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் 4 முதல் 5 சதவீதம் வரை, அதாவது ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

வாடகை ஓட்டுநர்கள் கவலை: சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு வாடகை ஓட்டுநர்களை கவலையடையச் செய்துள்ளது. இது தொடர்பாக கனரக வாகன ஓட்டுநர்கள் கூறும்போது, சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் மட்டுமே கட்டணம் உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், டிரக்குக்கான பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் தொகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

இது எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் உயரும். அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 5 முதல் 8 சதவீதம் அதிகரிக்கக் கூடும். எனவே, அரசு இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
 

 

Tags : தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.

Share via