ஆதிதிராவிடர் சமூக மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் விசேஷ பூஜைகளை நிறுத்தி வைப்பு.

by Editor / 11-07-2024 09:22:58am
ஆதிதிராவிடர் சமூக மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் விசேஷ பூஜைகளை நிறுத்தி வைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது கூகையூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் கி.பி 7 ஆம்  நூற்றாண்டில் 1184 ஆம் ஆண்டில் குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயனால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தற்போதைய நிலையானது ஜாதிய பிரச்சினையால் ஆலய வழிபாடு தடைபட்டு கிடப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூக மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவதை மற்ற 13 மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் ஆதிதிராவிடர்கள் இந்த ஆலயத்தில் அறங்காவலர்களாக இருந்து வந்தனர் என்று கூறப்படும் நிலையில், காலப்போக்கில் மாற்று சமூகத்தினர் கொலேச்சி வருவதால் ஆதிதிராவிடர் சமூக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த ஆலயத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் வந்து வழிபடுவதற்கு அந்த ஊரில் உள்ள மாற்று சமூகத்தினர் விரும்பவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும், கோவிலில் நடைபெறும் உற்சவ திருவிழாக்களில் ஆதிதிராவிடர்களும் பங்கேற்க உரிமை உள்ளது என்று கூறப்படும் நிலையில், இவர்கள் பங்கேற்கிறார்கள் என்பதற்காக கோவிலில் நடைபெறும் பல விசேஷ பூஜைகளை மாற்று சமூகத்தினர் நிறுத்தி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆதிதிராவிடர் சமூக மக்கள் நீதிமன்றம் வரை சென்று தங்களுக்கான உரிமையை நிலைநாட்டிக் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சொர்ணபுரீஸ்வரர் ஆலயமானது தற்போது ஜாதிய பிரச்சனையால் அமைதியாக கிடக்கிறது. மேற்கொண்டு இந்த ஆலயத்திற்கு சொந்தமாக 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இருப்பதாகவும், இதை ஆதிதிராவிடர்கள் அல்லாத மாற்று சமூகத்தினர் பயன்படுத்திக் கொண்டு பட்டா போட்டுக் கொள்வது, விற்பனை செய்வது, ஆலயத்திற்கு சொந்தமான இடங்களில் வீடுகள்,கடைகள் கட்டி பயன்படுத்தி கொள்வது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும்.. இதிலும் ஆதிதிராவிடர் சமூக மக்கள் தங்களுக்கான உரிமையை கேட்க சென்றால் மறுக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. சுமார் 50 ஏக்கர் அளவிலான நிலங்கள் மட்டும் ஆலயத்தின் கணக்கில் காட்டப்பட்டு வருவதாகவும் எஞ்சியுள்ள நிலங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு கிடப்பதாகவும் ஆதிதிராவிடர் சமூக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆலயத்தில் எழுந்துள்ள ஜாதிய பிரச்சனை மற்றும் முறைகேடுகள் குறித்து கூகையூர் கிராம ஆதிதிராவிடர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக படிக்கட்டுகளில் ஏறி இறங்கி ஏராளமான புகார் மனுக்களை அளித்து வந்த போதிலும்.. இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கும் மாற்று சமூகத்தினர் மக்களுக்குமான பிரச்சனையை தீர்த்து சமரசம் ஏற்படுத்தி வைக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்துள்ள ஜாதிய பிரச்சனை மற்றும் முறைகேடுகளை களைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூகையூர் கிராம ஆதிதிராவிடர் மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : ஆதிதிராவிடர் சமூக மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் விசேஷ பூஜைகளை நிறுத்தி வைப்பு.

Share via