சாலையில் வழிந்தோடிய டீசலை அள்ளிய பொதுமக்கள்.

by Editor / 28-10-2024 10:12:53am
சாலையில் வழிந்தோடிய டீசலை அள்ளிய பொதுமக்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு திருவண்ணாமலை வழியாக சென்று கொண்டிருந்தது.இன்று காலை செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி அருகே சென்றபோது திருவண்ணாமலையில் காய்கறிகளை இறக்கிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேனும், டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு டீசல் சாலை மற்றும் விவசாய நிலத்தில் ஆறாக ஓடியது. வேனை ஓட்டி சென்ற டிரைவர் சந்தோஷ் என்பவர் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். டேங்கர் லாரி விபத்தில் சிக்கி டீசல் வெளியேறி கொண்டிருப்பதையறிந்த பொதுமக்கள், பக்கெட், குடம் மூலம் டீசலை பிடித்துச்சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை மேற்கு போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். டீசலை இப்படி எடுத்து செல்லக்கூடாது, திடீரென தீப்பிடித்து விடும் என பொதுமக்களை எச்சரித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று டீசல் தீப்பிடிக்காதபடி தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : திருவண்ணாமலை மாவட்டம்: சாலையில் வழிந்தோடிய டீசலை அள்ளிய பொதுமக்கள்

Share via