நெல்லையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்-திமுகவினர் உற்சாகம்.

by Editor / 06-02-2025 11:55:21pm
நெல்லையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்-திமுகவினர் உற்சாகம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக, திருநெல்வேலி சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுக திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருநெல்வேலி கே.டி.சி.நகர் முதல் கங்கை கொண்டான் வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கை குலுக்கியவாறு நடந்து சென்றார்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி கங்கைகொண்டானில் டாடா குழுமத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், உள்ளே சென்று ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர், முதல் சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என எழுதி கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, ஆலையில் பணியாற்றும் பெண்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி நகரப்பகுதிகளில் மாலையில் உலா வந்த முதல்வர் இருட்டுக்கடை அல்வா கடைக்கு  நேரில் சென்று, அல்வாவினை வாங்கி, கடை உரிமையாளரிடம் உரையாடினார்.முதல்வரின் இந்த நிகழ்வு கட்சியினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உற்சாகத்தைகொடுத்துள்ளது.

 

Tags : நெல்லையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்-திமுகவினர் உற்சாகம்.

Share via