சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 11-02-2025 10:25:38pm
 சிறப்பு போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (56). இவர் நாகர்கோவில் போக்குவரத்துக் காவல் துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக வரிகோஸ் நோய் தாக்கம் இருந்தது. இதனால் ஸ்டீபன் அருள்ராஜ் கால் வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த டிசம்பர் மாத 24ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். வருகிற 19ஆம் தேதி மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜுக்கு நோய் பாதிப்பு குறையாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள பலா மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். 

இன்று காலை அவரது மனைவி வயோலா தோட்டத்திற்கு வந்தபோது மரத்தில் கணவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கூச்சலிட்டு அழுதார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து வந்து ஸ்டீபன் அருள்ராஜை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

Share via