தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பணியிட மாற்றம்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. மாணவர்களும், ஆசிரியர்களும் இதற்காக தயாராகி வருகின்றனர்.
பல பள்ளிகளிலும் சேர்க்கை முடிவடைந்து மாணவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. மறுபுறம் சில பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளும் நடந்துவருகிறது. முன்னதாக கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா எனும் சந்தேகமும் இருந்த நிலையில், தற்போது திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அதேபோல், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு விரைந்து அவற்றை வழங்க வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்புக்கு அரசு இயந்திரம் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இயக்குனர் பழனிச்சாமி,ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் உஷா ராணி,தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Tags : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பணியிட மாற்றம்..