அமைச்சர் ஆட்கள் எனக்கூறி தமிழக-கேரள எல்லையில் கனிமவள லாரிகளை மறித்து சோதனை செய்த நபர்கள்.

by Staff / 19-07-2025 12:25:54am
அமைச்சர் ஆட்கள் எனக்கூறி தமிழக-கேரள எல்லையில் கனிமவள லாரிகளை மறித்து சோதனை செய்த நபர்கள்.

அமைச்சர் ஆட்கள் எனக்கூறி தமிழக-கேரள எல்லையில் கனிமவள லாரிகளை மறித்து சோதனை செய்த நபர்கள் - லாரி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு.


தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இந்த கனிமவள லாரிகளானது அவ்வப்போது, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான வகையில் கனிமங்களை ஏற்றி சென்று கனிமவள கடத்தலில் ஈடுபடுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்றைய தினம் புளியரைப் பகுதியில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடி அருகே இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டு கேரளா நோக்கி சென்ற கனிமவள லாரிகளை மறித்து கனிமவளங்களை எடுத்துச் செல்வதற்கான பாஸை கேட்டு பெற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு சில ஓட்டுனர்கள் நீங்கள் யார்? நீங்கள் எதற்கு பாஸ் கேட்கிறீர்கள் எனக் கூறி பிரச்சினையில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பபானது.

தொடர்ந்து, அந்த 2 வாலிபர்களும் சில நபர்களை செல்போனில் அழைத்து வரவழைத்த நிலையில், அந்த நபர்கள் விரைந்து வந்து தாங்கள் அமைச்சர் ஆட்கள் எனவும், விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய எங்களை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி உள்ளார்கள் எனக்கூறி லாரி ஓட்டுனர்களிடம் பிரச்சினை ஈடுபட்டனர்.

 அதனைத்தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் அந்த நபர்களை பிடித்து நீங்கள் யார்? சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து சோதனை செய்ய நீங்க யார் எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பானது.

 அதனைத்தொடர்ந்து, அந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் காரைக்குடி பகுதியை சேர்ந்த நபர்கள் என தெரிய வந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இருந்தபோதும், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடி அலுவலகம் அருகே அமைச்சர் ஆட்கள் எனக்கூறி சாலையில் சென்ற கனிம வள வாகனங்களை மறித்து சில தனிநபர்கள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் யார் அந்த அமைச்சர்? எதற்காக தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான புளியரைப் பகுதியில் ஆட்களை வைத்து குறிப்பாக கனிம வள லாரிகளை மட்டும் சோதனை செய்கிறார்கள் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : People who stopped and checked mineral trucks at the Tamil Nadu-Kerala border, claiming to be ministerial personnel

Share via