கொரோனா அதிகரிப்பால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சந்தேகம்..? – முதல்வர் ஆலோசனை

by Admin / 30-08-2021 01:38:16pm
கொரோனா அதிகரிப்பால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சந்தேகம்..? – முதல்வர் ஆலோசனை


 
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், பள்ளி கல்லூரிகள் திறப்பு, எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
 
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் கல்லூரிகள் திறப்பு மற்றும் 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு  எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டிய சூழல் உருவாகும் என்ற நிலையில், தற்போதுள்ள சூழலை பள்ளி, கல்லூரிகளை திறப்பது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போதிலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாதிப்புகள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது உள்ள சூழல் மற்றும் கேரளா போன்ற மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றியும், தமிழகத்தில் பாதிப்பை மேலும் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமின்றி, கேரளா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தமிழக எல்லையான கோவை, உதகை போன்ற மாவட்டங்களில் பாதிப்பு குறித்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதி ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு சார்பில் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via