தலைமைச் செயலக 3645 ஊழியர்களுக்கு திறன் பயிற்சி அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் துவக்கி வைத்தனர்

by Editor / 14-09-2021 03:15:59pm
தலைமைச் செயலக 3645 ஊழியர்களுக்கு திறன் பயிற்சி அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் துவக்கி வைத்தனர்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3 ஆயிரத்து 645 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் துவக்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

அரசு செயல்பாட்டில் வெளிப்படை தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு இ ஆபிஸ் (e -Office) (மின் அலுவலகம்) திட்டத்தை உருவாக்கியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் இ ஆபிஸ் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு திறன் மற்றும் அறிவுசார் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி 120 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இ ஆபிஸ் நடைமுறைப்படுத்து வதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறை வது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும். பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் விரைந்து வழங்கப்படும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகர் பி.டபிள்யூ.சி. டேவிதார், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல், கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜி. வெங்கடராமன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தலைமை செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன், இணை தலைமை செயல் அலுவலர் கமல் கிஷோர், தேசிய தகவலியல் மையம் மாநில தகவல் அலுவலர் ஸ்ரீனிவாச ராகவன் பங்கேற்றனர்.

 

Tags :

Share via