பாரிமுனையில் நூதன முறையில் நகை கொள்ளை

by Editor / 19-09-2021 06:04:35pm
பாரிமுனையில் நூதன முறையில் நகை கொள்ளை

சென்னை, பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ஜெயின் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஜெயின் கேட்டராலா கெமிக்கல் என்ற பெயரில் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தும் அமிலங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் ராஜேந்திரகுமார் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்ய வைத்திருந்த 200 கிராம் தங்கக் கட்டிகளைக் காணவில்லை என புகார் அளித்தார்.

அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர குமார் கடை ஊழியரான மனோஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மனோஜ் கடையில் இருந்தபோது ராஜேந்திர குமாரின் நெருங்கிய நண்பர் எனக் கூறி கடைக்குள் ஒரு நபர் வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து தலை வலிப்பதாகவும் வெளியில் சென்று டீ வாங்கி வரும்படி அவர் கூறியுள்ளார். தனது முதலாளியின் நண்பர் என்பதால் மனோஜும் டீ வாங்க வெளியில் சென்றார். டீ வாங்கி வந்த பிறகு அந்த நபர் தேநீர் வேண்டாமென கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் என்ற தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்குள் வந்த நபர் கடையின் கல்லாவில் திருட்டு சாவி போட்டு தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு செல்வது பதிவாகியிருந்தது.

அந்த காட்சிகளை பழைய குற்றச்சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பெங்களூரைச் சேர்ந்த பழைய குற்றவாளி முகமது சமீர் (வயது 29) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சமீர் இதே போன்று ஏற்கனவே யானைக்கவுனி, பூக்கடை, வடக்கு கடற்கரை காவல் எல்லைகளில் கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மும்பையில் தலைமறைவாக இருந்த சமீரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மும்பையில் சமீருக்கு சம்சியா அஞ்சும் என்ற முதல் மனைவியும், பெங்களூரில் ஷாருதீன் என்கிற இரண்டாவது மனைவியும் இருப்பது தெரியவந்தது. தான் முதல் முறை கொள்ளையடிக்கும் தங்கத்தை முதல் மனைவிக்கும், அடுத்ததாக கொள்ளையடிக்கும் தங்கத்தை 2வது மனைவிக்கும் பிரித்துக் கொடுப்பதை சமீர் வழக்கமாக கொண்டிருப்பதாகவும், மேலும் தான் கொள்ளையடிக்கும் பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தி வந்ததாகவும் சமீர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கடைசியாக கொள்ளையடித்த பணத்தில் 6 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றும் 1 லட்சம் ரூபாய்க்கு விலை உயர்ந்த வாஷிங் மிஷின் போன்ற பொருட்களை தனது இரண்டு மனைவிகளின் வீட்டிற்கும் வாங்கிக் கொடுத்துள்ள விவரங்களும் தெரியவந்தன. அதனையடுத்து 2 தனிப்படைகள் மும்பை மற்றும் பெங்களூர் விரைந்தனர். ராஜேந்திர குமாரின் கடையில் சமீர் கொள்ளையடித்த ரூ. 15 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கம், ரூ. 6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்கும் முயற்சியில் போலீசார் பெங்களூரு, மும்பையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via