திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் போட்டா போட்டி : முதல்வர்

by Editor / 23-09-2021 11:31:54am
திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் போட்டா போட்டி : முதல்வர்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் திட்டம் மிகவும் மகத்தானது. விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்ததில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புது மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி நான்கு மாதத்திலேயே திட்டத்தை முடிக்க மின்சாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 7ம் தேதி நான் பதவி ஏற்கவில்லை. பொறுப்பை ஏற்றேன் என்று தான் சொல்ல வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுமார் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு தரப்பட்டன. திமுகவின் ஆட்சி உழவர்களின் ஆட்சியாகவே எப்போதும் இருந்து வருகிறது.3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சியில் 82,987 பேருக்கும், 2016-21 அதிமுக ஆட்சியில் 1,38,592 பேருக்கும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான்.

திருவாரூரில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா அமையவுள்ளது. புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சீரழிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தை செழிப்பாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,'என்றார்.

 

Tags :

Share via