கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக  ரூ.25 கோடி ஒதுக்கீடு:முதல்வர் அறிவிப்பு 

by Editor / 08-06-2021 06:05:43pm
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக  ரூ.25 கோடி ஒதுக்கீடு:முதல்வர் அறிவிப்பு 

 

தமிழ்நாட்டில், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர்க்காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடமிருந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக தற்போது வரை 280 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைகள், ரெம்டெசிவிர் மருந்து வாங்குவது, ஆக்சிஜன் கொண்டு வருவது, அதற்கான கண்டெய்னர்கள் வாங்குவது, பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட கொரோனா நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர்க்காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via