கேரளஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டாலும் ஆட்சி கலைப்பு - சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

by Staff / 27-10-2022 01:51:00pm
கேரளஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டாலும் ஆட்சி கலைப்பு - சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் யு.ஜி.சி விதிமுறைப்படி நியமிக்கப்படவில்லை எனவும், அவர்கள் 9 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து துணைவேந்தர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆளுநருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு எனவும், அவரது கடிதத்துக்கு நவம்பர் 3ஆம் தேதிக்குள் துணைவேந்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டும், தற்காலிகமாக பதவி விலக வேண்டாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், ஆளுநரை சீண்டும் விதமாக கேரள நிதி அமைச்சர் பாலகோபால், "உத்தரப்பிரதேசத்தில் துணைவேந்தராக இருப்பவர்களுக்கு ஐம்பது முதல் நூறு செக்யூரிட்டி கார்டுகள் உண்டு. அங்குள்ள போரட்டக்காரர்களால் பிரச்னை ஏற்படும் என்பதால்தான் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வருபவர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களின் விஷயங்களை புரிந்துகொள்ள முடியாது" எனப் பேசினார்.

ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் விதமாக அமைச்சர்கள் விமர்சித்தால் அமைச்சர் பதவியை திரும்பபெறும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே ஆளுநர் ஆரிப் முகமதுகான் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பாலகோபாலின் பதவியை பறிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முதலமைச்சர் நிராகரித்தார்.

ஆளுநர், ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கிடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் இந்த சூழலில், பல்வேறு பாஜக தலைவர்கள் கேரள அரசை கலைக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சர்க்சைக்குறிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியக் குடியரசுத் தலைவரையும், அரசியலமைப்பில் மையத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆளுநர் என்பதை கேரளாவின் பைத்தியக்கார கம்யூனிஸ்டுகள் உணரட்டும். ஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், மாநில அரசை கலைக்க மோடி அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via