பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாம்: டிடிவி தினகரன்

by Staff / 01-02-2023 02:23:09pm
பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாம்: டிடிவி தினகரன்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்கத் ஜோதியின் மகன் டாக்டர் கார்த்திக் கண்ணனுக்கும், திமுக முன்னாள் நெல்லை மாநகராட்சி துணை மேயர் முத்துராமலிங்கத்தின் மகள் புஷ்ப ரேகாவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ஒரு சிலரின் சுயநலத்தால், அதிமுக கட்சி இன்று மிகவும் பலவீனமடைந்துள்ளது. சுயநலத்துடன், பணபலத்துடன் சிலர் செயல்ப்பட்டதால் தான் அதில் இருந்து வெளியேறி அமமுக கட்சியை உருவாக்கினேன். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் வரும் தேர்தல்களில் மக்கள் வெற்றி வாய்ப்பை தருவார்கள் என நாங்கள் நம்புகிறோம். காலம் எல்லாவற்றிற்கும் தீர்வு தரும். ஈரோடு தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம் .மக்கள் விரோத போக்கை செய்து வரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் அமமுக நோக்கம்.

நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலாயத்தில் வைக்கலாம்.ஆனால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கும் வண்ணம் கடலில் வைக்க கூடாது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும். அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும். இதை தான் ஒபி எஸ் சொல்கிறார். ஒபிஎஸ் தேர்தலில் நிற்க வேட்பாளரை அறிவிக்கட்டும் அதன் பிற்கு பார்த்துக் கொள்ளலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via