ரூ. 80 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ, இலங்கைக்கு கடத்த முயற்சி

by Staff / 10-03-2023 03:37:42pm
ரூ. 80 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ, இலங்கைக்கு கடத்த முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், யு பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் கியூ பிரிவு போலீசார் வேம்பார் அக்கரை பகுதியில் இருந்து கொண்டு வரும் வாகனங்களை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த TN65 AU 1633 என்ற வாகனப் பதிவெண் கொண்ட பொலிரோ பிக் அப் (BOLERO PIK-UP) வாகனத்தில் அதிக அளவில் சாக்கு முட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு வந்த வாகனத்தை கியூ பிரிவு போலீசார் சந்தேகமடைந்து நிறுத்த முயன்ற போது வாகனத்தை ஓட்டி வந்த இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரின் மகன் சாகுல் ஹமீது (34) வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார் தங்களது காரில் ஏறி அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வேகமாக துரத்திச் சென்றுள்ளனர். சாகுல் ஹமீதும் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சாயல்குடி சென்று அங்கிருந்து தரைக்குடி, தங்கம்மாள்புரம் வழியாக சூரங்குடி நோக்கி வந்து கொண்டிருந்த போது அவரைப் பின் தொடர்ந்து வந்த கியூ பிரிவு போலீசார் சூரங்குடியில் மடக்கி பிடித்து சாகுல் ஹமீது கைது செய்தது மட்டுமன்றி இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 மூட்டைகள் சுறா மீன் இறக்கைகள் மற்றும் 11 மூட்டைகள் திருக்கை மீன் பூ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்த இந்த கடத்தல் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த சாகுல் ஹமீது-விடம் எங்கிருந்து இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி வேம்பாரில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் கடத்தல் வாகனத்தை கியூ பிரிவு போலீசார் பின்தொடர்ந்து சூரங்குடியில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்த சம்பவம் சினிமா காட்சியை மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது.

 

Tags :

Share via