உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் - முதல்வர் வேண்டுகோள்

by Staff / 26-03-2023 04:13:18pm
உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் - முதல்வர் வேண்டுகோள்

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ. 166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒய். சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் மற்றும் உச்சநீதிமன்ற கிளைகளில் மாநிலங்களுக்கு விகிதாசார மறுசீரமைப்பு ஆகியவற்றில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் தமிழையும் நீதிமன்ற மொழியாக அனுமதிக்க வேண்டும். மேலும் இவ்விஷயத்தில், மத்திய சட்ட அமைச்சர் ஆதரவாக இருப்பதற்கு நன்றி கூறுகிறேன். குறைந்தபட்சம் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளைகளை நிறுவ வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு தலைமை நீதிபதியும், மத்திய சட்டத்துறை அமைச்சரும் எங்களது கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்றார்.
மேலும் முதல்வர் தனது உரையில், கடந்த 2021 மே மாதம் முதல், இன்று வரை புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி நிலையில், கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைக்கவும், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும்சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க 23 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதியதாக நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்புக் கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வழக்குரைஞர்களின் எழுத்தர் நலநிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய், இறந்த வழக்குரைஞர்களின் எழுத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.

 

Tags :

Share via