போக்சோவில் இளைஞர் கைது

by Staff / 04-05-2023 01:24:53pm
போக்சோவில் இளைஞர் கைது

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி உள்ளார். இவரது தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் தற்போது தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாணவி வீட்டில் உள்ளார்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக அந்த மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதற்கு அந்த மாணவி நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி கதறி அழுதார்.இதுகுறித்து மாணவியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது அந்த மாணவிக்கும், கூலித்தொழிலாளியான சுசீந்திரன் (வயது 24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை தொடர்ந்து அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுசீந்திரனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo