பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் பலி

by Editor / 02-08-2021 03:56:18pm
பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் பலி

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமையும் அதிகரித்து வருகிறது.பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி ஏற்றது முதலே, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.மேலும், கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் போன்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவந்தார்.

இந்தநிலையில் புதிய கரோனா அலை பாதிப்புகளால் அந்நாடு மீண்டும் பாதிப்படைந்து உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 37,582 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 17 ஆயிரத்து 855 ஆக உயர்ந்து உள்ளது.அந்நாட்டில் கரோனா பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 910 பேர் பலியாகியுள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5,56,370 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via