4 வயது சிறுவன் கிணற்றில் தள்ளிக் கொலை; 7 வயது சிறுவர்கள் இருவர் கைது

by Editor / 15-09-2021 02:09:01pm
4 வயது சிறுவன் கிணற்றில் தள்ளிக் கொலை; 7 வயது சிறுவர்கள் இருவர் கைது

சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், அப்பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற 8 மகனும், தீனதயாளன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். பக்கத்து வீட்டின் அருகில் குவிக்கப்பட்டிருந்த மணலில் விளையாடிக் கொண்டிருந்த தீனதயாளனை நேற்று மாலை முதல் காணவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸில் அச்சிறுவனின் தந்தை பார்த்திபன் புகாரளித்தார்.

இதையடுத்து, போலீஸார் சிறுவன் விளையாடியதாகச் சொன்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பார்த்திபனின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அல்போன்சா என்பவரின் பெயரன் 8-ம் வகுப்பு படித்து வரும் ராஜ்குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் 7-ம் வகுப்பு படித்து வரும் கண்ணன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) ஆகிய இருவரும் சிறுவன் தீனதயாளளை அழைத்துக்கொண்டு நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த 2 சிறுவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், "எங்க பாட்டி அல்போன்சா வீட்டு முன்னால குவிச்சு வைக்கப்பட்டிருந்த மணல்ல தீனதயாளன் விளையாடிக்கிட்டிருந்தான்.

அவன் விளையாண்டதுனால மண்ணு சரிஞ்சுது. அவனை எங்க பாட்டி, சத்தம் போட்டாங்க. தீனதாயளன் எங்க பாட்டியைத் திட்டினான். எங்க பாட்டியை எதிர்த்துப்பேசித் திட்டியதுனால எனக்குக் கோவம் வந்துச்சு. அதனால பக்கத்து வீட்டுல உள்ள கண்ணனுடன் சேர்ந்து தீனதயாளனை கூட்டிக்கிட்டு போய் கிணத்துல தள்ளி விட்டோம்" என ராஜ்குமார் கூறியுள்ளான்.அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தீனதயாளனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து ராஜ்குமார், கண்ணன் ஆகிய 2 சிறுவர்களையும் சிவகாசி டவுன் போலீஸார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo