இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில்  தமிழக மக்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்

by Editor / 24-04-2021 07:36:01pm
இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில்  தமிழக மக்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்

 

 தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை; கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வருகின்ற செய்திகளும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மிகுந்த கவலையளிக்கிறது.வட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும், மருத்துவமனைகளில் படுக்கைக்கும் மக்கள் தடுமாறும் சூழ்நிலையைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் சுகாதார உட்கட்டமைப்பு நமக்கு வரப்பிரசாதம் என்றாலும் - அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே மக்களை இந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.
வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதால் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைவதற்கும் - தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது. மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிட வேண்டும். 
அதிக எண்ணிக்கையில் - போர்க்கால வேகத்தில் பரிசோதனைகளைச் செய்து - கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து - மற்றவர்களுக்கு நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை ஒரு மக்கள் இயக்கம் போன்ற பிரச்சாரமாகவே ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களின் கீழுள்ள நிர்வாகம் மூலம் செய்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்பில் கழகத்தின் சார்பில் பொறுப்பில் இருப்போரும் இந்தப் பணியில் ஆங்காங்கே அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைத்திட வேண்டும். அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உடையவர்கள் மூலம்தான் அதிகம் இந்த நோய்த் தொற்று பரவுகிறது எனச் செய்திகள் வருவதால் - பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்திடுவது காலத்தின் கட்டாயம். இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via