கேரளத்தில் தொடர் மழை 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணை நிரம்பியது

by Editor / 19-10-2021 03:53:08pm
 கேரளத்தில் தொடர் மழை 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணை நிரம்பியது

கேரளாவில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அணைகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது; 10 அணைகளின் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்து உள்ளனர்.


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 184 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய் துறையினர் செய்து வருகிறார்கள்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மழை வெள்ளச்சேதங்கள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் குறித்து பத்தனம்திட்டாவில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின், மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா வர்கீஸ் மற்றும் மாநில நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காக்கி அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காக்கி நதியின் இரு மதகுகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பம்பை நதியில் நீரின் அளவு அபாய கட்டத்தைத் தாண்டும்.

இந்நிலையில் வரும் 20 - 24ம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க இயலாது. பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


இடுக்கி அணையின் முழுக் கொள்ளளவு 2,403 அடியில் தற்போது, 2,396 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இன்று காலை அணை திறக்கப்படுகிறது. சோலையாறு, பம்பை, காக்கி, இடமலையாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் உள்ள நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via