சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு

by Admin / 19-08-2023 12:06:19pm
சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த மணி (26),வள்ளுவர் கோட்டம் அருகேகாய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரது கடையில் 2மாதங்களாக சிலர் கள்ள நோட்டுகளைக் கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தைக்குச் சென்றபோது, இதுகுறித்து மணிக்கு தெரிந்துள்ளது. பின்னர் அவர் கடையில் காய்கறி வாங்க வருவோரைக் கண்காணித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கடைக்கு வந்த முதியவர் ஒருவர், ரூ.670-க்கு காய்கறிகளை வாங்கிவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். சில்லறை மாற்றி மீதம் கொடுப்பதாகக் கூறி, அந்தமுதியவரை கடையில் அமரவைத்த மணி, இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர், ஆய்வாளர் சேட்டு தலைமையில் வந்த போலீஸார், அந்த முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர், பள்ளிக்கரணை பாலாஜி நகரைச் சேர்ந்த அண்ணாமலை (65) என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அண்ணாமலையை கைது செய்த போலீஸார், அவரது கூட்டாளியான, விருகம்பாக்கம் ஸ்டேட் வங்கிக் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (62) என்பவரைக் கைது செய்தனர். இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் விருகம்பாக்கத்தில் பிரின்டிங் இயந்திரம் மூலம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கடந்த 5 மாதங்களாக அச்சடித்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.45.20 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரின்டிங்இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படும் உபகரணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், 4 தனிப்படை அமைத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கறிஞர் சுப்பிரமணியன், வேறு மாநிலத்தில் வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ளார். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து, கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரின்டிங் பிரஸ்-ல் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார். எனினும், தானே நோட்டுகளை மாற்றாமல், நண்பரான அண்ணாமலை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.4.80லட்சம் வரை கள்ள நோட்டுகளை மாற்றி உள்ளார்.

முன்னாள் ராணுவ வீரரான அண்ணாமலை ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், அவர் ராணுவப் பணியிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர். இவர்கள் மொத்தம் ரூ.50 லட்சம் அச்சடித்துள்ளனர். ரூ.45.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.4.80 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு துணை ஆணையர் கூறினார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ``மக்கள், வியாபாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபர்கள், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் விவரம் வெளியிடப்படாது'' என்றார்.

கள்ள நோட்டு கும்பல் குறித்து தகவல் அளித்த காய்கறி வியாபாரி மணிக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு
 

Tags :

Share via