மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை

by Editor / 22-09-2024 03:30:17pm
மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் நில அதிர்வு பொதுமக்கள் அச்சம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிக்கை

நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தின் தென்பகுதியில் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்படும் சூழலும், தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசு உள்ளிட்டவை ஏற்படும் அபாயமும் உள்ளதாக சமூக ஆர்வலர்களும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர். மேலும் கல் குவாரிகளை வரைமுறைப்படுத்தி நிறுத்துவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்இன்று காலை 11.50 அளவில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் பெரும் சப்தத்துடன் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடையம், சேர்வைகாரன்பட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

பல இடங்களில் வீட்டில் உள்ள பொருள்கள் உருண்டுள்ளன. இதைப் பார்த்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் அச்சத்துடன் நின்று மிரட்சியுடன் ஒருவரிடம் ஒருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டம்,  தென்காசி வட்டம், ஆழ்வார்குறிச்சி மற்றும் கடையம் பகுதிகளில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.

தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை.இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை

Share via