பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் பரப்பிய இரண்டு நபர்கள் கைது.

by Editor / 07-11-2024 10:56:50pm
பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் பரப்பிய இரண்டு நபர்கள் கைது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க வீடியோ தான் வசித்து வரும் பகுதியில் உள்ள அனைவருக்கும் இடையே பரவி வருவதாகவும் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி அதை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் புகாரை விசாரணை செய்த காவல்துறையினர்  பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்த ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்த ஜெயராஜ்(33) என்பவரையும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பிய ஆலங்குளத்தைச் சேர்ந்த சக்தி அருள் (28) என்பவரையும் கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரவியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தல், அதை பகிர்தல் என இது போன்ற எந்த செயலில் ஈடுபட்டாலும் அவை தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : பெண்ணின் அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் பரப்பிய இரண்டு நபர்கள் கைது.

Share via