சீமான் மீது நடவடிக்கை எடுக்க -- நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 10-01-2025 07:25:39pm
சீமான் மீது நடவடிக்கை எடுக்க --  நீதிமன்றம் உத்தரவு.

கடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசிய போது, உனக்கு உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று பேசி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழக பெரியார் திராவிடர்கழகம் உள்ளிட்ட  அமைப்புகள் சீமானுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தன. நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டினை முற்றுகையிடும் முயற்சிகளும் நடந்தன. இதன்பின் திமுக தரப்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே சீமானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 60 க்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கேட்டும் பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் மதுரை கேகே நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சீமான் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி புகார் அளித்திருந்தார். ஆனால் அவரது மனு ஏற்கப்படவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காவும் பாடுபட்ட தந்தை பெரியார் குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பேசியுள்ளார்.

எனவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் பேசிய கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது. எனவே மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல்துறையினர் மனுதாரரின் புகாரை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 20ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருபுறம் சீமான் பேச்சுக்கு  கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்,  நீதிமன்ற உத்தரவு அதிக  முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

 

Tags : சீமான் மீது நடவடிக்கை எடுக்க -- நீதிமன்றம் உத்தரவு.

Share via