கூடுதல் கட்டணம் வசூல் விவகாரம்   அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு

by Editor / 17-07-2021 04:13:49pm
கூடுதல் கட்டணம் வசூல் விவகாரம்   அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு

 

அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வழக்கத்தை விட இம்முறை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்க படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை  விசாரித்த நீதிபதி, அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி துறை ஆணையர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை கேட்டுக் கொண்ட நீதிபதி, அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via